Sunday, July 18, 2010

"அம்மா"

அன்பு என்ற தலைப்பில் மிகச்சிறிய கவிதை சொல் என்றாள் என் அன்னை!.

"அம்மா" என்றேன்!உடனே! இன்னும் சின்னதாய் சொல் என்றாள்!

"நீ" என்று அவளை காட்டினேன்.

ஆக்கம்-க.தி .வளவன்....

Sunday, July 11, 2010

அம்மா!

அம்மா! அபூர்வமான இறைவனின் அன்பளிப்பு!
அம்மா! தன்னை இருட்டாக்கி எம்மை ஒளிரச்செய்தவள்!
அம்மா! உனது மறு பெயர் அன்பு, பாசம், கருணை!
அம்மா! தனது இரத்தத்தை பாலாக்கியவள்!
அம்மா! பல இரவை எமக்காக தொலைத்தவள்!
அம்மா! நடக்க,பேச கற்பித்த முதல் குரு!
அம்மா! அன்றும் இன்றும் என்றும் அன்பு காட்டுபவள்!
அம்மா! உனது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது!

ஆக்கம்-க.தி .வளவன்....

அபூர்வ படைப்பு -அம்மா

அருகில் இருந்தாலும்
தொலைவில் இருந்தாலும்
அன்பு மாறாத,
தொல்லை தராத,
இரவு பகல் எமக்காக கனாக்காணும்
இறைவனின் ஒரே ஒரு அபூர்வ
படைப்பு -அம்மா
ஆக்கம்-க.தி .வளவன்....

தனிமை!!!

தனிமையை வெறுத்வன் நான்!

இன்றோ அதை ரசிக்கிறேன்.

என் தனிமையை கவிதையாய்

மாற்றியது தனிமையோ?

ஆக்கம்-க.தி .வளவன்....

Thursday, July 8, 2010

அம்மா

முதல் பார்த்த முகம் உன்முகம்,

முதல் கேட்ட பேச்சு உன் பேச்சு,

முதல் சொன்ன சொல் அம்மா,

முதல் உண்ட உணவு தாய்ப்பால்,

முதல் கிடைத்த முத்தம் உன் முத்தம்,

முதல் கிடைத்த அன்பு உன் அன்பு,

முதல் பிடித்த கை உன்கை,

எதிலும் முதல்!! என்றும் முதல்!! எங்கும் முதல்!!

ஆக்கம்-க.தி .வளவன்

Wednesday, July 7, 2010

அம்மா

நான் பிறக்கும் முன் வந்த சொந்தம் --நீ அம்மா

நான் இறந்தாலும், மாறாத தாய் பந்தம் -நீ அம்மா

ஆக்கம்-க.தி .வளவன்

Monday, July 5, 2010

அம்மா

அம்மா உன்னை நினைக்காத,
நாளில்லை,
உன்னை நினைக்காமல்,
நாமில்லை ,
நீயின்றி கவியில்லை,
நீயின்றி நாமில்லை,
நீயின்றி விடிவில்லை,
நீயின்றி பாரில்லை
ஆக்கம்-க.தி .வளவன்

அம்மா

பல கண்டம் பல கடல்கள் தாண்டி இருந்து,
தொலைபேசியில் "அம்மா"எப்படி சுகமா?
என்று உச்சரித்த ஒரு சில நொடி பொழுதில்,
பேச்சின் வித்தியாசம் புரிந்து,
"உடம்புக்கு சரியில்லையா தம்பி?என்று,
பதறியபடி படபடத்து கேட்பாள்,
அன்பு படித்த மருத்துவச்சி!!!
ஆக்கம்-க.தி .வளவன்....

Tuesday, June 22, 2010

அம்மா

அழகிய கடற்கரையில்,
அம்மா என தலைப்பிட்டு
எழுதி முடிப்பதற்குள்,
அலை மாதா,
அலை கொண்டு,
அழைத்து
சென்றாள்,
அன்னையவளை,
அழகிய கவியென்று.
ஆக்கம்-க.தி .வளவன்

நாணம்

தொட்டாஞ் சினிங்கியே,
உன் நாணத்தை,
நான் உணர்ந்தேன்,
உன் அருகில்,
நான் வந்த போது,
நீ
யெல்லோ,
பெண்ணிற்கு இலக்கணம்..

ஆக்கம்-க.தி .வளவன்

Monday, June 21, 2010

பள்ளி நட்பு

எங்கோ பிறந்தோம்,
எங்கோ வளர்ந்தோம்,
எங்கோ வாழ்கிறோம் ,

அறியா வயதில்,
நாம் அறிமுகமானோம்,
நட்பின் அருமை,
அன்று நாம் அறியோம்,

ஒரு இலையில்,
உண்டு மகிழ்ந்தோம்,
பல ஆட்டம்,
ஆடி மகிழ்ந்தோம்,
பல இடங்கள்,
சென்று வந்தோம்,
பல கதைகள்,
கதைத்து மகிழ்ந்தோம்,
பல இரவு,
சேர்ந்து படித்தோம்,
சில சண்டைகள்,
போட்டும் உண்டோம்,

காலம் தன்,
வேலையை காட்ட,
பல நாடு,
பிரிந்து சென்றோம்,
ரயில் பயணமோ பள்ளி நட்பு?
என நினைக்கையில்,

பல நட்பை மீட்டுத்தந்தது,
முகப்புத்தகம்,
மீண்டும் பிறந்தோம்
பள்ளி நினைவில்!
ஆக்கம்-க.தி .வளவன்

Sunday, June 20, 2010

பிறந்த மண்

பிறந்த மண்ணை ,
தவழ்ந்த மண்ணை ,
வளர்ந்த மண்ணை ,
வாழ்ந்த மண்ணை,
சொந்த மண்ணை,

நினைவில் வாழும் மண்ணை ,
நினைக்க மறந்திடுமோ ?
நினைக்க மறுத்திடுமோ?

பிழைக்க வந்த ,
உடம்பு வாழும் ,
புகலிட மண்ணைவிட?
ஆக்கம்-க.தி .வளவன்

களவு



மனதை,

கண் இமைப்பதற்குள்,

களவு கொண்டாயே?

கண்கள் களவு செய்வதை அறிந்தேன்,

உன்னை பார்த்த பின்பு!

ஆக்கம்-க.தி .வளவன்

Thursday, June 17, 2010

கண்ணே கண்மணியே!


கண்ணே கண்மணியே,
உன்னை நினைக்காத,
நாளில்லை,
உன்னை நினைக்காமல்,
நானில்லை,

நீயின்றி கவியில்லை,
நீயின்றி விடிவில்லை,
நீயின்றி காதலில்லை,
நீயின்றி நானில்லை.
ஆக்கம்-க.தி .வளவன்....

Friday, June 11, 2010

பெண்!

அழுகையில்,
கண்ணீர் துடைக்கும் அம்மா நீ,

பிரச்சனையில்,
பிரச்சனை பகிரும் மனைவி நீ,

சாதனையில்,
சாதனை பேசும் சகோதரி நீ,

கஷ்டத்தில்,
அறிவுரை சொல்லும் அமைச்சர் நீ,

துன்பத்தில்,
துயர் தீர்க்கும் நண்பி நீ,

கலக்கரை விளக்காய்,
காலமெல்லாம் ஒளிர்பவளும் நீ..
ஆக்கம்-க.தி .வளவன்....

Friday, June 4, 2010

பிரதீபன் அண்ணா!!!



வெள்ளை நிறத்தவனே,
வெள்ளை மனத்தவனே,
வெள்ளை குணத்தவனே,
வெள்ளை என அழைப்பவனே,

பிரதீபன் அண்ணா என,
பல முறை கூப்பிடுவேன்,
ஓம் ஓம் என சொல்லி,
ஓடோடி வருவீங்களே!
Gate வாசலிலே,
பல கதைகள் கதைத்திருக்கோம்,
எம்மை விட்டு போவதை,
ஒருநாளும் சொல்லலையே,

Cricket விளையாடி,
வீண் சண்டை போடுவோமே,
குழுக்கள் பிரிகையிலே,
உன்பக்கம் எனை அழைப்பாய்,
கூடி திரிகையிலே,
என்னையும் நீ அழைப்பாய்,

வருஷம் பிறந்தவுடன்,
பல கோவில் சென்றிருந்தோம்,
குளிக்கப் போகையிலும்,
குட்டி வணக்கிடிவாய்,
கும்பிட்ட தெய்வம் உன்னை,
கைவிட்டுப் போனதுவே,

திருமலை பல கடந்து,
Colombo வரை சென்றிருந்தாய்,
கொடிய அரக்கன் அவன்,
திருமலைக்கு திருப்பி வைத்தான்,
Action Faimல் உத்தியோகம்,
என சொல்லி,
உற்றார் உறவெல்லாம்,
ஊர் கூடி மகிழ்ந்தனராம்,

உத்தியோகம் போன பிள்ளை,
உயிரின்றி வருகையிலே,
உற்றார் உறவெல்லாம்,
உரத்து மார்பு தட்டி கதறினராம்,
ஆண்டு நான்கு ஆகுதண்ணா,
ஆழ்மனதில் நீ உள்ளாயண்ணா,
ஆழப் பதிந்ததினால்,
ஆண்டாண்டு வாழ்வாயண்ணா..
ஆக்கம்-க.தி .வளவன்....

Thursday, June 3, 2010

உழைப்பு


பட்டம் பலவிருந்தும்,
பலகலைகள் தெரிந்திருந்தும்,
சட்டம் பலபடித்தும்,
சாதனைகள் பல செய்திருந்தும்,

உண்ண உணவிருந்தும்,
உடுக்க உடையிருந்தும்,
உற்றார் உறவிருந்தும்,
உடன்பிறப்பு பலவிருந்தும்,

உழைப்பு இல்லையெனின்,
ஊர் தெரு நாயும் மதியாதடா!
உழைத்து உதவிடடா,
ஊர் போற்றி வணங்குமடா!
ஆக்கம்-க.தி .வளவன்....

Wednesday, June 2, 2010

படிக்க முடியவில்லையே?

பள்ளிப்பாடம் நான் படித்தேன்,
பட்டப்படிப்பும் நான் படித்தேன்,
பல கலைகள் நான் படித்தேன்,
பல கதைகள் நான் படித்தேன்,
பல கவிதைகள் நான் படித்தேன்,
பயன் என்ன?உன்னை,
படிக்க முடியவில்லையே?
ஆக்கம்-க.தி .வளவன்....

நம் நாடு போல வருமா????


கொட்டும் பனியும்,
சுட்டெரிக்கும் வெயிலும்,
நித்தம் வெளிநாட்டில்,
நிம்மதி எமக்கில்லை,

ஆங்கில தமிழும்,
கோமாளி நாகரிகமும்,
நித்தம் எம் நாட்டின்,
நினைவுகளை அழிக்குதடா,

Fast Food ஆம் பலவுண்டு ,
KFC ,PIZZA ,MCDONALD,
BBQ என சொல்லி,
பல party நடத்திறாங்க,
இத்தனையும் ஈடாகுமோ,
நம் நாட்டு உணவிற்கு?

நித்தம் சோறுகறி,
தயிர் ,ஊறுகாய்,
மோர்மிளகாய்,பப்படமும்,
பிட்டு ,இடியப்பம் ,
தோசை ,இட்டலி,
பொங்கல் ,உப்புமா,
பாயாசம்,வடை,
பூரி ,கூழ், என,
பலவகை உணவுகளாம்,
நினைக்கையிலே ஊறுதடா,
எம்நாட்டு உணவினினை!

பாவாடை தாவணியும்,
வேட்டி சால்வையும் ,
வேதனையில் உள்ளதடா,
வெளிநாட்டில் வெட்கத்துடன்,

கல் தோன்றா மண்தோன்றா,
தமிழ் மொழியும் ,நாகரிகமும்,
தொலையுதடா எம்மை விட்டு !!
ஆக்கம்-க.தி .வளவன்....

Tuesday, June 1, 2010

தாய்


ஈரைந்து மாதம் நீ தவமிருந்தாய்,
ஈன்றதாயெனும் பெருமை நீ அடைந்தாய்,
ஈசன்மகனென்று சொல்லி நீ மகிழ்ந்தாய்,

நான் பசிக்க நீ பசிமறந்தாய்,
நான் அழ நீ அல்லலடைந்தாய்,
நான் மகிழ நீ மனமகிழ்ந்தாய்,

பள்ளி படிப்பில் பலத்தைத்தந்தாய்,
பரீட்சை நேரம் பல இரவு விழித்திருந்தாய்,
பட்டம் பெற்றதும் பரவசமடைந்தாய்,

உலகத்தை நீ உணர்த்தி வைத்தாய்,
உண்மை வெல்லுமென நீ ஞானம் தந்தாய்,
உறவு பலவெனக்கு நீ அறியச்செய்தாய்,

ஊக்கம் ஓங்க வைத்தாய்,
அன்பை உணர வைத்தாய்,
வெற்றி பிறக்க வைத்தாய்...
ஆக்கம்-க.தி .வளவன்....


வாழ்ந்து காட்டுவோம்

காலம் எம்மை
கசக்கி எடுத்தாலும்,
கவலை எம்மை
கண்ணீரில் நனைத்தாலும்,
துன்பம் எம்மை
தூங்க மறுத்தாலும்,
கண்ணீர் எம்மை
கலங்க வைத்தாலும்,
பிரிவு எம்மை
பிழிந்து எடுத்தாலும்,
வாழ்க்கை எம்மை
வாட்டி வதைத்தாலும்,
விதி எம்மை
விரட்டி அடித்தாலும்,
விதியை விதிவிலக்குவோம்,
விடியல் எம் கையில்,
விடியலை தேடி வாழ்வோம்.
ஆக்கம்-க.தி .வளவன்....

Monday, May 31, 2010

கிராமத்து மழை


ஈசல்கள் கூட்டம் கூட,
எறும்புகள் இரை தேட,
தவளைகள் கீதம் பாட,
பறவைகள் பர பரக்க,

மேகம் திரை மூட,
பானு ஒளி குன்ற,
மண்ணில் இருள் சூழ,
பகல் இரவாக,

இந்திரன் குணம் கொள்ள,
மின்னல் படம் எடுக்க,
இடி இசை இசைக்க,
காற்று உலா வர,

விவசாயி கூத்தாட,
மழலைகள் மகிழ்ந்தாட,
மிருகங்கள் வெருண்டோட,
மரம் ,செடி,கொடிகள் கனாக்கான,

சர சரவென சலங்கை சத்தமிட்டு,
பட படவென விழுதே,
என் வீட்டுத் தகர மத்தளமிட்டு,
கிராமத்து மாரி மழை.

ஆக்கம்-க.தி .வளவன்....

Sunday, May 30, 2010

கவனி

நன்றி -தினகரன் (படம்)

உன் சுவடுகளை கவனி,
உன் வார்த்தைகளை கவனி,
உன் பார்வைகளை கவனி,
உன் செயல்களை கவனி,
உன் சிந்தனைகளை கவனி,
உன் நடத்தைகளை கவனி,
உன் மனத்தை கவனி,
வாழ்க்கை உன்னை கவனிக்கும்...
ஆக்கம்-க.தி .வளவன்....

Saturday, May 29, 2010

பிரிவு


தாய் மண்ணை ,
நினைக்கும் பொழுது,
காற்றில் மிதந்தோம்,
பழைய நினைவில்,

கற்ற பள்ளியை,
நினைக்கும் பொழுது,
கனவில் நனைந்தோம்,
மீண்டும் பள்ளியில்,

பள்ளி நண்பனை,
சந்திக்கும் பொழுது,
முதுமை மறந்தோம்,
மீண்டும் பிறந்தோம்,

உயிர் நண்பனை,
அணைக்கும் பொழுது,
உள்ளம் மகிழ்ந்தோம்,
அன்பில் கலந்தோம்,

உற்ற உறவை ,
பிரியும் போது,
உயிரை இழந்தோம்,
கண்ணீரில் நனைந்தோம் ...
ஆக்கம்-க.தி .வளவன்....

Friday, May 28, 2010

நேரம்



நேரம் ஒரு மூலப்பொருள், அதனை பல்வேறு பயனுள்ள முடிவுப்பொருட்களாக மாற்றுவது எங்கள் ஒவ்வொருவரது கைகளில் தங்கியுள்ளது உள்ளது .
  • நேரத்தை படிப்பில் செலவழியுங்கள் உயர்வும், மரியாதையும் உங்களை தேடி வரும்.
  • நேரத்தை விளையாட்டில் செலவழியுங்கள் ஆரோக்கியம் உங்களை தேடி வரும்.
  • நேரத்தை உழைப்பில் செலவழியுங்கள் வெற்றியும்,செல்வமும் உங்களை தேடி வரும்.
  • நேரத்தை நட்பில் செலவழியுங்கள் மகிழ்ச்சி உங்களை தேடி வரும்.
  • நேரத்தை சமூக சேவையில் செலவழியுங்கள் ஆத்ம திருப்தி உங்களை தேடி வரும்.
  • நேரத்தை விடா முயற்சியில் செலவழியுங்கள் செல்வமும்,புகழும் உங்களை தேடி வரும்.
  • நேரத்தை அன்புக்காக செலவழியுங்கள் அது முதலீடாக மாறி எல்லாம் உங்களை தேடி வரும்.
ஆக்கம்-க.தி .வளவன்....

பேச்சு

அன்பாக பேசு,
அமைதியாக பேசு,
இனிமையாக பேசு,
இயல்பாகபேசு,
உற்சாகமாக பேசு,
சிந்தித்து பேசு,
திட்டமிட்டு பேசு,
மெதுவாக பேசு,
சமயமறிந்து பேசு,
பண்பாக பேசு,
பணிவாக பேசு,
பிரியமுடன் பேசு,
புன்னகையுடன் பேசு,
உணர்ச்சியுடன் பேசு,
மகிழ்ச்சியுடன் பேசு,
தெளிவாக பேசு,
அளவாக பேசு,
விளக்கமாக பேசு,
கருத்துடன் பேசு,
சுருக்கமாக பேசு,
நன்றாக பேசு,
கம்பீரத்துடன் பேசு,
மனிதனாக பேசு,
உண்மையை பேசு.......
ஆக்கம்-க.தி .வளவன்....

Thursday, May 27, 2010

முயற்சி


பதவியிலும் பணிவு,
பணத்திலும் பண்பு,
வேகத்திலும் விவேகம்,
கோபத்திலும் பொறுமை,
ஏழ்மையிலும் நேர்மை,
வறுமையிலும் வள்ளல்,
துன்பத்திலும் துணிவு,
தோல்வியிலும் முயற்சி,
வாழ்க்கையிலும் வெற்றி..
ஆக்கம்-க.தி .வளவன்....

Tuesday, May 25, 2010

அ-ஒள



அன்பை என்றும் வளர்த்திடு,
ஆடி,பாடி மகிழ்ந்திடு,
இதய தாயை போற்றிடு,
ஈகை செய்ய பழகிடு,
உண்மை பேசி உயர்ந்திடு,
ஊரே போற்ற வாழ்ந்திடு,
எண்ணம் உயர வணங்கிடு,
ஏழை மகிழ வாழ்த்திடு,
ஐயம் இட்டு மகிழ்ந்திடு,
ஒற்றுமை உயர உழைத்திடு ,
ஓடி ஓடி உதவிடு,
ஔவை தமிழில் வாழ்ந்திடு.
ஆக்கம்-க.தி .வளவன்....

Saturday, May 22, 2010

விடுதலை


எப்போது தனிமைக்கு விடுதலையோ?
அப்போது உனக்கு விடுதலை!

எப்போது வறுமைக்கு விடுதலையோ?
அப்போது உனக்கு விடுதலை!

எப்போது அடிமைக்கு விடுதலையோ?
அப்போது உனக்கு விடுதலை!

எப்போது பிரிவுக்கு விடுதலையோ?
அப்போது உனக்கு விடுதலை!

எப்போது தோல்விக்கு விடுதலையோ?
அப்போது உனக்கு விடுதலை !
ஆக்கம்-க.தி .வளவன்....

Thursday, May 20, 2010

பேசும்-காதல்


விழிகள் பேசும்,
விநாடி பொழுதில்,
மனங்கள் பேசும்,
மர்மம்-காதல்,

மனங்கள் பேசும்,
நொடி பொழுதில்,
இதயங்கள் மாறும்,
மர்மம்-காதல்,

இதயங்கள் மாறும்,
கண பொழுதில்,
கரங்கள் சேரும்,
மர்மம்-காதல் ...
க.தி .வளவன்....

Tuesday, May 18, 2010

இரத்தம் உறையல!!!


இரத்தம் உறையல,
சோகம் தணியல,
வாட்டம் போகல ,
வறுமை தீரல,
வருத்தம் வாடல,
துன்பம் தூங்கல,
கண்ணீர் குறையல,
பிரிவு இன்றல ,
நினைவு தூங்கல,
உறங்க முடியல,
கனவு கனியல ,
தொலைக்க எதுவுமில
விடுதலை கிடைக்கல,
வருடம் முகாமில,
விசாரணை தொடங்கல ,
விடிவு பிறக்கல,
தோல்வி புதிதல,
வெற்றி கிடைக்கல,
துணிவு உறங்கல,
மனம் சோரல,
வாழ்கை கசக்கல,
இயலாதது ஒன்றல்ல,
நம்பிக்கை போகல,
க.தி .வளவன்....

Monday, May 17, 2010

அம்மா


கவிக்கு பாரதி,
கற்புக்கு சீதை,
தமிழுக்கு ஔவை,
வில்லுக்கு அர்ச்சுனன்,
வலிமைக்கு ஆஞ்சினேயர்,
வாய்மைக்கு அரிச்சந்திரன்,
நட்புக்கு இலக்குமணன்.
அகிம்சைக்கு காந்தி ,
கொடைக்கு கர்ணன்,
பண்புக்கு ராமன்,
அன்புக்கு நீ அம்மா,

க.தி .வளவன்....

ஒழிந்த காதல்



முகத்தில் தெரிந்தது
அகத்தில் ஒழிந்த
காதலை,

பேச்சில் தெரிந்தது
மூச்சில் ஒழிந்த
காதலை,

கண்ணில் தெரிந்தது
பெண்ணில் ஒழிந்த
காதலை,

மடலில் தெரிந்தது
மனதில் ஒழிந்த
காதலை,

கனவில் தெரிந்தது
நனவில் ஒழிந்த
காதலை,

கவியில் தெரிந்தது
கற்பனையில் ஒழிந்த
காதலை,

பிரிவில் தெரிந்தது
காதலில் ஒழிந்த
நோதலை...

க.தி .வளவன்....

Sunday, May 16, 2010

ஜெசிக்கா வாட்சனின் துணிகரச் செயல்



பதினாறு வயதுடைய ,துணிகரச் செயல் விழைதவருமாகிய கப்பலோட்டி ஜெசிக்கா வாட்சனின் (Jessica Watson) ஆஸ்திரலிய(Australia) மண்ணுக்கு மிகப் பெரிய சாதனை ஒன்றை வைகாசி 15, 2010 இல் பெற்று தந்துள்ளார்.

ஜெசிக்கா வாட்சன் தனது பயணத்தை அக்டோபர் 18, 2009 சிட்னி துறைமுகத்தில் இருந்து ஆரம்பித்து,210 நாட்களில் நிற்காது,யாரின் துணையின்றி பாய் மர படகின்(10-metre yacht Ella's Pink Lady) துணையுடன் உலகை சுற்றி வந்த முதலாவது இளம் வீரராக திகழ்கிறார்.


நீ ஒன்றை வெற்றி கொள்ளவேண்டும் என்றால் கனவுகாண்,நம்பு உன்னால் முடியும் என்று ,கடிமையாக உழை கனவை நனவாக்க .இதுதான் எனது வெற்றியின் இரகசியம் ,அதை நிருபித்துவிட்டேன் ,என்று தனது இந்த 210 நாள் பயண துணிகர வெற்றியின் பின் சமூகத்திற்காக தெருவித்தார்.

இதனை ஒரு பாடமாக கொண்டு நாங்களும் ஊக்கமாக எமது வெற்றி பயணத்தை தன்னம்பிகையுடன் ஆரம்பிப்போம்.கனவை நனவாக்குவோம் .

உடையர் எனப்படுவது ஊக்கம்அஃது இல்லார்
உடையது உடையரோ மற்று?


ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும்; ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ?

க.தி .வளவன்....

Related article from பதிடரனின் பதிவுகள்

Saturday, May 15, 2010

பிரச்சனைகள் !!!!!!!!




இன்றைய காலத்தில் இலக்கியக்களை எமது வாழ்க்கையோடு இணைத்து பார்க்கவேண்டும்.பல பிரச்சனைகளுக்கு எமக்கு தீர்வு கிடைக்கும்.

யாருக்கு பிரச்சனை இல்லை ? எல்லோருக்கும்தான் பிரச்சனை உண்டு .போராடி வெல்வோம் .

இராமாயணத்தை எடுத்து நோக்குவோம் .அன்பின் வடிவமான இராமபிரான் இராமாயணத்தில் கதாநாயகன்.அவர் பிரச்சனைகளை தேடி போகவில்லை ,மாறாக பிரச்சனைகள் அவரை தேடி வந்தது .

சகுனியின் சூழ்ச்சியாலும் கைகேயின் வரத்தாலும் பரதன் நடால இராமன் காடு செல்ல வேண்டியதாயிற்று.இராமனுக்கு பிரச்சனை ஆரம்பித்தது.வனத்தில் இளைய பிரான் இலட்குமனனுடனும் ,வனத்தின் தலைவன் குகனுடனும் ,கற்பின் தேவதை சீதா தேவியுடனும் வாழ்ந்து வரும் காலங்களில் சூற்பனகை மூலமாக பிரச்சனைகள் வந்தது .அவள் இராமனை மணம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டாள். இராமனிடம் தனது விருப்பத்தை தெருவிக்கையில் இராமபிரான் அதை மறுத்தார் .இராவணனின் துணையுடன் இராமனை அடையவேண்டும் என சீதையை பற்றி எடுத்து கூறினாள்.சூற்பனகை அண்ணன் இராவணன் சீதையை இலங்காபுரியில் சிறை வைக்கிறான் .இப்படி பல பிரச்சனைகள் இராமனை தொடர்ந்தது .

இதிலிருந்து நாங்கள் விளங்கி கொள்ளவேண்டியது ,பிரச்சனைகளை நாங்கள் விட்டு விலகினாலும் பிரச்சனை எங்களை தொடர்த்துகொண்டே இருக்கும் .பிரச்சனை பிறக்கும் முன்னும் இருந்தது ,இறந்த பின்னும் இருந்துகொண்டே இருக்கும் .ஆனால் நாங்கள் தான் இடையில் வந்து பிறந்தோம். இராமனை பிரச்சனைகள் தொடர்துகொண்டே இருந்தது .ஆனால் அதை எல்லாம் இலகுவாக முறியடித்தார் தனது நம்பிக்கையால். இதை போல நாங்களும் முறையடிக்க முயலவேண்டும் .பிரச்சனைகளை கண்டு ஓடி ஒழிக்காமல் ,போராடி வெல்வோம் .

க.தி .வளவன்....

Tuesday, May 11, 2010

வாழ்கை


தனிமை தணியல ,
வறுமை தீரல,
வருத்தம் வாடல,
துன்பம் தூங்கல,
கண்ணீர் குறையல,
பிரிவு இன்றல ,
உறங்க முடியல,
கனவு கனியல ,
தோல்வி புதிதல,
வெற்றி கிடைக்கல,
துணிவு உறங்கல,
மனம் சோரல,
வாழ்கை கசக்கல,
நம்பிக்கை போகல...........
க.தி .வளவன்....

To see facebook comments

Monday, May 10, 2010

மாலை பொழுது



மாலை பொழுதினிலே,
மலர் தூங்கும் வேளையிலே,
வேலை முடித்துவிட்டு,
யன்னலோரம் அமர்கையிலே,
தேனை குடித்துவிட்டு,
தேன் குழவி பறகையிலே,
காற்றை கிழித்துக்கொண்டு,
காதோரம் கவி பறந்ததம்மா...
க.தி .வளவன்....

Saturday, May 8, 2010

பெறுமதி


மிக பிரபல்யமான ஒரு பேச்சாளர் ஒருவர் தனது பேச்சை 1 வெள்ளி பணத்தை கையில் வைத்தபடி ஆரம்பித்தார். பேசிகொண்டிருகையில் அவர் சபையில் உள்ளவர்களை கேட்டார், யாருக்கு இந்த 1 வெள்ளி பணம் வேண்டும் என்று ?ஒவ்வொருவரது கைகளும் உயர ஆரம்பித்தன .

சில நிமிடங்களின் எல்லோரும் பார்க்கும்படியாக அந்த காசை சுருட்டிக் கசக்கினார். அந்த பேச்சாளர் அதே கேள்வியை கேட்டார் .மீண்டும் ஒவ்வொருவரது கைகளும் உயர ஆரம்பித்தன.

சில நிமிடங்களின் பேசிகொண்டிருகையில் அந்த பணத்தை கீழே போட்டு மிதித்தார் . அந்த பணத்தை எடுத்து வினாவினார் ,இப்போது இந்த பணம் கசங்கியும் ,சுத்தம் இல்லாமலும் இருக்கிறது ,முன்பு கேட்டது போல கேட்டார் . யாருக்கு இந்த பணம் வேண்டும் என்று ?என்ன ஆச்சரியம் !மீண்டும் அனைவரது கைகளும் உயர்ந்தன.

சிரித்துக்கொண்டு அவர் கூறினார், இதிலிருந்து ஒரு பாடம் நீங்கள் எல்லோரும் படிக்கவேண்டும் என்று . எல்லோரும் வியப்பாக அவரின் பதிலை எதிர்பார்த்து நின்றார்கள் .

அவர் சொன்னார் ,இப்படி என்ன செய்தாலும் பணத்தின் பெறுமதி குறைவதில்லையோ அதை போல .என்ன துன்பம், துயரம், பிரச்சனை, பாடு, கவலை உங்களை வந்து உங்களை கசக்கி , மிதித்து போட்டாலும் உங்கள் பெறுமதி நிறைத்ததகவே எப்போதும் இருக்கும் என கூறி தனது பேச்சை தொடர்ந்தார்.

மனிதனின் பெறுமதி என்றும் எப்போதும் அழியாது . அந்த பெறுமதியை விருத்தி செய்வதும் ,குறைத்துக்கொள்வதும் எங்கள் ஒவ்வொருவரது கையில்தான் உள்ளது .

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,
அதுவும் நன்றாகவே நடக்கும்....

க.தி .வளவன்....

Thursday, May 6, 2010

உறவு

உறவு என்று சொல்ல பலவுண்டு,
விதி என்ற சொல்லால் பிளவுண்டு-அதை

பிளவு என்று சொல்ல மனமில்லை,
உறவு என்ற சொல்லை நினைக்கயிலே.
க.தி .வளவன்....

பதிடரன் .காம்


பதிடரன் என்னும் உன் பெயரை,
பதியின் அருளால் உன் இணைய பெயராக்கினாய்,

பதிடனின் பதிவுகளில்,
பல பயனுள்ள பதிவுகளை பதித்துக்கொண்டாய்,

பதிடனின் பிளாக்கர் பதிவுகளில்,
பல தரமான தகவல்களை தாங்கிநின்றாய்,

பதிடனின் இணைய களஞ்சியத்தில்,
பல இணைய இணைப்புகளை இணைத்துக்கொண்டாய்,

பதிடனின் வானொலியில்,
பல இணைய வானொலிகளை தேடித்தந்தாய்,

பதிடரனே விடாமல் பற்றிக்கொள் விழாமல் எழுந்துநிற்பாய்,
பதிடரனை விடாமல் வாழ்த்துகிறோம் விழாமல் எழுந்துநிற்க.

க.தி .வளவன்....

Wednesday, May 5, 2010

மனசு


சுடு வெயில்
கரும் புகை
இவை எதிலும் வாடாமல்
பத்திரமாய் வைத்திருக்கிறேன்
உனக்கு தெரியாமல் திருடிய
உன் மனசை...
க.தி .வளவன்....

குளிர்காலம்




பனியும் நிறைந்தது,
உடலும் விறைத்தது,
காற்றும் குளிர்ந்தது,
மனமும் சிலிர்த்தது,
குளிரும் பிறந்தது,

மாறுகின்ற சூழலில்;
மாறுபட்ட மனிதருடன் ,
மாறுகின்ற காலத்தில்;
மாறுபட்ட மனிதனாய்,
இன்னும் எத்தனைகாலம்
எமக்குள் நாமாக நாம்.

க.தி .வளவன்....

Sunday, May 2, 2010

கவி


அன்றைய கவி காவியத்தால் மலர்ந்தது ;
என் கவி நோதலில் பூத்தது,
இன்றைய கவி காதலில் மலர்ந்தது;
என் கவி வேதனையில் பூத்தது,

தனிமை இனிமையானது;
இனிமை தனிமை கவியானது,
இரவு பகலானது;
பகலிரவு கவியானது,

துன்பம் இன்பமானது;
இன்பதுன்பம் கவியானது,
வெறுப்பு விருப்பானது;
விருப்பு வெறுப்பு கவியானது,

கண்ணீர் மையானது;
மை கவியானது,
என்னை மறந்தேன்,
கவியில் உறைந்தேன்.
க.தி .வளவன்....

Saturday, May 1, 2010

அம்மா


அம்மா நீ என் அவதாரம்;
பாச மழையின் அதிபதியே,
அம்மா நீ என் ஆலயம்;
நட்பு மழையின் ஆரம்பமே ,
அம்மா நீ என் இதயம்;
நேச மழையின் விளைநிலமே,
அம்மா நீ என் தெய்வம்;
அன்பு மழையின் உறைவிடமே,
அம்மா நீ என் சுவாசம்;
க.தி .வளவன்....

தூயநட்பு


பாடசாலையிலும் நட்பு
பல்கலைகளத்திலும் நட்பு,
வேலைத்தளத்திலும் நட்பு,
இணையத்திலும் நட்பு,
தொலைபேசியிலும் நட்பு,
ரயில் பயணத்திலும் நட்பு,
நடைபயணத்திலும் நட்பு,

நட்பு என்பது சுவாசிப்பது,

நண்பா! உனது தூய நட்பை;
துன்பத்திலும், துயரத்திலும் கண்டேன்,

நண்பா! உனது தூய நட்பை;
பிரச்சனைகளிலும், பாடுகளிலும் கண்டேன்,

நண்பா! உனது தூய நட்பை;
கவலையிலும், கண்ணீரிலும் கண்டேன்,
க.தி .வளவன்....

Friday, April 30, 2010

விதியே விதியே


விதியே விதியே;
மதியை வெல்ல விடு,
மதியே மதியே;
விதியை வென்று விடு,

கனவே கனவே;
கண்டதை நனவாக்கு,
நனவே நனவே;
கனவை நிஜமாக்கு,

நதியே நதியே;
பாவத்தை தீர்த்துவிடு,
பதியே பதியே;
துன்பத்தை தீர்த்துவிடு,

க.தி .வளவன்....

Wednesday, April 14, 2010

மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்

மலையின் மேல் ஓடிய குதிரை பற்றிய இந்த விசித்திரக் கதையை நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர்கள். முனிவர் ஒருவருக்கு அரசர் அந்தக் குதிரையைப் பரிசாக வழங்கினார். கொடுத்த கையோடு முனிவரின் காதில் ஒரு கெட்ட வார்த்தையையும் சொன்னார்.

முனிவர் அதிர்ந்து போனார். “சுவாமி! தவறாக நினைக்காதீர்கள். இந்த வார்த்தையைச் சொன்னால்தான் குதிரை நிற்கும். “கடவுளே நன்றி” என்று சொன்னால் ஓடத் தொடங்கிவிடும்,” என்றார். குதிரை ஓடத் தொடங்கியது. “நான் போய் இந்தக் கெட்ட வார்த்தையை எப்படிச் சொல்வது? யாராவது கேட்டால் என்ன நினைப்பார்கள்?” என்று பலவாறாகக் குழம்பிப் போனார். யோசித்துக் கொண்டே மலைப் பாதையில் போய்க்கொண்டிருந்தவருக்கு திடீரென்று கவனம் வந்தது. குதிரை மலையுச்சியை நெருங்கிக் கொண்டிருந்தது. பத்து அடிகள்தான். குதிரை பாதாளத்தில் விழுந்துவிடும். இதற்கிடையில் அந்தக் கெட்ட வார்த்தை வேறு மறந்து தொலைத்திருந்தது. “குதிரையே! நில் நில்! என்றெல்லாம் கதறினார். ஊஹும். இன்னும் இரண்டே அடிகள்தான்… நல்ல வேளையாக அந்த வார்த்தை நினைவுக்கு வந்தது. சத்தம் போட்டுச் சொல்லவும், மலையுச்சியின் விளிம்பில் குதிரை கனகச்சிதமாக நின்றது. நிம்மதிப் பெருமூச்சு விட்ட மனிதர், “கடவுளே நன்றி” என்றார். குதிரை குபீரென்று பாதாளம் நோக்கிப் பாய்ந்தது.

இதில் இரண்டு விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். குதிரையை நிற்கச் செய்வதற்கு அந்தக் கெட்ட வார்த்தையைச் சொல்ல வேண்டும். ஒரு புதிய விஷயத்தைப் பழகிக்கொள்ளவும் முனிவருக்கு மனமில்லை. அதே நேரம், என்ன நடந்தாலும் “கடவுளே நன்றி” என்று சொல்லிப் பழகிவிட்டது. அந்த விஷயத்தை விடவும் முடியவில்லை. பலருக்கும் வாழ்க்கை சிரமமாக இருப்பது இந்த இரண்டு காரணங்களால்தான். புதிதாக ஒன்றைப் பழகுவதில் இருக்கும் தயக்கம். பழகிய ஒன்றை மாற்றிக்கொள்வதில் இருக்கும் தடுமாற்றம். இந்த இரண்டும் இருந்தால்தான் சின்னப் பிரச்சினைகூட மலைபோல் தெரிகிறது.

புதிய சூழலுக்குத் தங்களை ஆட்படுத்திக் கொள்ளாதவர்கள் வாழ்க்கை என்பதே தடைகள் நிறைந்ததென்று தவறாகக் கருதுகிறார்கள். மாற மறுக்கும் மனோபாவம் பாதையில் கிடக்கும் சின்னஞ்சிறு கூழாங்கற்களைக்கூட மலையென்று கருதி மனம் பதறச் செய்யும்.

ஆப்பிள் கம்ப்யூட்டர் கம்பெனியை நிறுவிய ஸ்டீவ் ஜாப்ஸ், தொடங்கி சில ஆண்டுகளிலேயே தன் நிறுவனத்தில் தனக்கும் அடுத்த நிலையில் பொறுப்பேற்குமாறு ஜான் ஸ்கல்லி என்னும் மிகச்சிறந்த நிர்வாகியை அழைத்தார். ஜான் ஸ்கல்லி அப்போது உலகப்புகழ் பெற்ற குளிர்பான நிறுவனம் ஒன்றில் மிக முக்கியப் பொறுப்பில் இருந்தார். மிக விரைவில் அதே நிறுவனத்தில் பல உயரங்களை எட்டிப்பிடிக்கும் நிலையிலும் இருந்தார்.

அந்த பீடத்தை விட்டுவிட்டு நான்கே ஆண்டுகள் ஆன நிறுவனம் ஒன்றில் சேருவதா என்ற தயக்கம் அவருக்கு இருந்தது. மறுத்துச் சொல்லலாம் என்ற மனவோட்டத்தில் ஸ்கல்லி இருப்பது ஸ்டீவ் ஜாப்ஸுக்குப் புரிந்தது. “ஸ்கல்லி! நீங்கள் வாழ்க்கை முழுவதும் சர்க்கரை கலந்த தண்ணீரை விற்றுக் கொண்டிருக்கப் போகிறீர்களா, அல்லது என்னுடன் இணைந்து இந்த உலகத்தை மாற்றப் போகிறீர்களா?”

புதிய முயற்சியில் இறங்குவதென்று முடிவெடுத்தார் ஜான் ஸ்கல்லி. ஆப்பிளுக்கான காலம் கனிந்தபோது அதனால் பெருமளவு பணமும் பயனும் பெற்றார். ஒரு புதிய விஷயத்தை அவர் துணிச்சலுடன் ஏற்றதால் உழைப்புக்கும் புதிய முயற்சிக்கும் உரிய பலன் கிடைத்தது. இன்று பல நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களிடையே புதிய விஷயங்களை ஏற்றுக்கொள்ளச் செய்யத் தான் போராடி வருகின்றன.

வாரன் பெனிஸ் என்பவர் மிக முக்கியமான நிர்வாகவியல் ஆலோசகர். முன்னணி நிறுவனம் ஒன்றின் நிர்வாக இயக்குநர் ஒருவரிடமிருந்து அவருக்குக் கடிதம் வந்திருந்தது. “வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ள என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டுமென்று எனக்குத் தெரியும். ஆனால் என்னிடம் பணிபுரியும் ஆயிரக் கணக்கானவர்கள் தங்கள் உலகம் மாறுவதை விரும்பவில்லை. என்ன செய்யலாம்?” என்று கேட்டிருந்தார். உலகின் மாற்றங்களை அங்கீகரிக்காதவர்களுக்குத்தான் எல்லாமே தாண்ட முடியாத சிக்கல் போலத் தோன்றுகிறது.

தனிமனித நிலையிலாகட்டும், நிறுவன அளவிலாகட்டும், மாற்றத்தையும் புதுமைகளையும் புகுத்தும் முன்னால் அவற்றுக்கான அவசியத்தை அங்கீகரிக்க வேண்டும். மனநிலையில் யாரெல்லாம் மாற்றத்திற்குத் தயாராகிறார்களோ, அவர்கள் எல்லாம் உற்சாகமாக முன்னேறிச் செல்கிறார்கள்.

ஒரு சின்னக் குன்றைப் பார்த்ததும் குழந்தை குதித்தேறுவதுகூட அதனால்தான். பெரியவர்களுக்கோ, அவ்வளவு தூரம் ஏற வேண்டுமே என்கிற மலைப்பு ஏற்படுகிறது. அந்த மலைப்புக்கு மலை காரணமல்ல. மலையேறுவது சிரமம் என்கிற முன்முடிவே காரணம்.

புதிய மாற்றங்களுக்குத்தான் பொருத்தம் தானா என்கிற கேள்வி காந்தியடிகளுக்குக்கூட இருந்தது. நவீன இந்தியாவில் தனக்கு இடமில்லை என்று அவரே அறிவித்தார். ஆனால் காந்தீயத்தின் சில அம்சங்களை நவீன உலகம் உரிய மாற்றங்களுடன் உள்வாங்கிக் கொண்டது.

“மாற்றங்களுக்கு அஞ்சிய பெண்மணி ஒருவர் மனச்சோர்வுடன் அமர்ந்திருந்தார். அவரை உசுப்பி, உற்சாகம் கொள்ள வைத்தது, உபதேசங்கள் அல்ல. ஒரு விளம்பர வாசகம். “ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்” என்ற நிறுவனம் “எங்ற் ண்ய்ற்ர் ற்ட்ண்ள் ஜ்ர்ழ்ப்க்” என்று வாசகத்தை தன் விமான சேவை களுக்கான விளம்பரமாய் வெளியிட்டிருந்தது. இந்த உலகுக்குள் தனக்கு மட்டும் இடமில்லையா என்ன என்று அவர் உற்சாகமாய் மீண்டும் முயன்றார். சுயமுன்னேற்ற நிபுணரும் ஆனார். அவர்தான் சூஸன் ஜெஃபர்ஸ். Feel the fear and do it anyway என்ற புத்தகத்தின் ஆசிரியர்.

மலைபோல் ஒரு தடை, பலருக்கும் மனதில் தான் இருக்கிறது. தடையை நகர்த்துங்கள் தெளிவாகும் பாதை.


மிக்க நன்றி:- மரபின் மைந்தன் முத்தையா,

நமது நம்பிக்கை

Tuesday, April 13, 2010

பாராட்டு என்னும் மழை!

“அணிலுக்கு அதன் முதுகில் இருக்கும் மூன்று கோடுகள் எப்படி வந்தன தெரியுமா?” என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டு, அதற்கான பதிலும் உங்களுக்கு சொல்லப்பட்டிருக்கும். கிட்டத்தட்ட எல்லா இந்தியனுக்கும் இந்தக் கதை தெரிந்திருக்கும்.

இலங்கைக்குச் செல்ல இருந்த இராமனுக்கு உதவியாக சேதுப்பாலம் கட்டப்பட்டபோது தன் பங்குக்கு அணில் தன் உடலில் மணலை ஒட்டிக் கடலில் கொண்டு கரைத்ததாகவும், அதனைப் பாராட்டி இராமன் அணிலைத் தன் கையில் எடுத்து அதன் முதுகில் தடவிக் கொடுத்ததாகவும், அதுதான் மூன்று கோடுகளாகப் பதிந்து விட்டதாகவும் சொல்லப்படும் கதைதான் அது!

“இராமர் பாலம் உண்டா இல்லையா என்று பா.ஜ.க. கருத்தைக் கேட்கிறீர்கள்; தி.மு.க. கருத்தைக் கேட்கிறீர்கள்; எதற்கும் அணில் பிள்ளையிடமும் கேட்டுவிடுங்கள்!” என்று ஒரு மேடையில் ஒரு கவிதை கேட்ட நினைவு.

இது கதைதான். ஆனால் இந்தக் கதை ஓர் ஆழமான பொருளைச் சொல்கிறது. ‘யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும்; மனமுவந்து பாராட்டுங்கள்’, என்பதே அது.

செய்கிற வேலைக்குக் கிடைக்கும் பாராட்டு எவரையும் ஊக்கப்படுத்தும்; இன்னும் சற்று அதிகமாக உழைக்க வைக்கும். ‘தன்னுடைய முயற்சியும் உழைப்பும் அங்கீகரிக்கப்படுகிறது’, என்ற எண்ணம் நம்பிக்கையை வார்க்கிறது. இன்னும் நன்கு செயலாற்ற வேண்டும் என்கிற வேட்கையை உண்டாக்குகிறது.

குறிப்பாகக் கல்வியிலோ, பொருளாதார நிலையிலோ, பணி நிலையிலோ, வயதிலோ அல்லது சமூக அங்கீகாரத்திலோ சற்றுக் குறைவான நிலையில் உள்ளவரை அங்கீகரித்துப் பாராட்டுவது அவசியம். அவர்களுக்கு அதைவிட ஊக்கமருந்து இல்லை. வாழ்க்கை என்னும் விளையாட்டில், தடைசெய்யப்பட முடியாத ஊக்க மருந்து இது!

கேரள மாநிலத்தை ஒட்டிய தமிழக மாவட்டம் ஒன்றின் குக்கிராமத்தில் ஒருநாள் காலைச் சிற்றுண்டி சாப்பிடும்படி ஆயிற்று. எவ்வளவு மறுத்தும் கேட்காத அன்புத் தொல்லையில் அந்த வீட்டில் சாப்பிட அமர்ந்தோம். தரையிலேயே அடுப்பை வைத்து, கீழே அமர்ந்து பூரி செய்யலானார் வீட்டுப் பெண்மணி. வாழ்நாளில் அத்தனை வித்தியாச வடிவங்களில் பூரியை நான் பார்த்ததில்லை. வட்டம் தவிர எல்லா வடிவங்களிலும் அவை இருந்தன. அந்த வீட்டில் என்றோ ஒரு நாள்தான் இவற்றையெல்லாம் செய்வார்கள் என்ற எடுத்துக்காட்டுடன் பூரிகளும் அதற்கான கூட்டும் வந்தன. உபசரித்த அன்பு காரணமாக, சுவையைப் பெரிதாக மனம் எண்ணவில்லை.

“இந்த மாதிரி பூரி சாப்பிட்டதே இல்லை அம்மா. ரொம்ப பிரமாதம்” என்று உடன் வந்த நண்பர் சொன்னதும், அந்தப் பெண்ணின் முகத்தில் ஏற்பட்ட மலர்ச்சியும், மகிழ்ச்சியும் பாராட்டப்படுவதன் பலனைக் காட்டின. ‘பொய்மையும் வாய்மையிடத்தே’ என்று வள்ளுவன் சொல்லவில்லையா என்ன?

தகுதியானவர்களைக் கூட பாராட்ட பல நேரங்களில் நாம் தவறிவிடுகிறோம். மனப் பூர்வமாக அடுத்தவரைப் பாராட்டுவது என்னும் உயரிய குணத்தை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

ஆசிரியர்களிடம் இந்தக் குணம் இருந்தால், அது நல்ல மாணவர்களை உருவாக்குகிறது. அலுவலகப் பொறுப்பாளரிடம் இந்தக் குணம் இருந்தால், அது நல்ல ஊழியர்களை உருவாக்கு கிறது. ஒரு தலைவனிடம் இந்த நல்ல குணம் இருந்தால், அது வெற்றியைத் தேடித்தரும் தொண்டர்களை உருவாக்குகிறது. ஒரு குடும்பத் தலைவரிடமும் தலைவியிடமும் இந்தக்குணம் இருந்தால் அது நல்ல தலைமுறையை உருவாக்குகிறது.

மனத்தில் பொறாமையும், தன் திறமையைப் பற்றி தாழ்வான எண்ணமும் அதனால் தோன்றிய உள்அச்சமும் கொண்டவர்களே அடுத்தவர் களைப் பாராட்ட மறுக்கிறார்கள். தன்னம்பிக்கை கொண்டவர்களும் தன் நிலைமை மீறி ஆசைப் படாதவர்களும் அடுத்தவரைப் பாராட்டத் தயங்குவதே இல்லை. இந்த இரு பிரிவினரில் நாம் எந்தப் பிரிவில் இருக்கிறோம் என்பது மிக முக்கியம்.

அடுத்தவரைப் பாராட்டும் பழக்கம் இல்லாமல் போனால், வேறு ஒரு நோயும் நம்மிடம் வந்து சேரும். ‘தற்பெருமை’ என்னும் நோயே அது. இன்று கற்றறிந்த பெரியோர் களிடமும், வழிகாட்ட வேண்டிய தலைவர்களிடமும் இந்த நோய் தலைவிரித்தாடுவதன் காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்? அடுத்தவரின் திறமையைப் பாராட்டி மகிழாமல், ‘அது அவர்களுக்குத் தான் போட்ட பிச்சை’ என்று எண்ணிக் கொள்வதுதான்.

மகாபாரதத்தில் சொல்லப் படும் பல கிளைக் கதைகளுள் ஒன்று தற்பெருமையின் கீழ்மையைப் பற்றிப் பேசுகிறது. தனது வில்லான காண்டீபத்திடம் அளவற்ற அபிமானம் வைத்திருந் தான் அர்ச்சுனன். “காண்டீபத்தைக் குறை சொல்லிப் பேசுபவர் எவராயிருந்தாலும், அவரை நான் கொல்வேன். அப்படி கொல்ல முடியாமல் போனால் தற்கொலை செய்து கொள்வேன்” என்று சபதம் ஏற்றிருந்தான் அவன்.

குருஷேத்ர போர் நடந்து கொண்டிருந்த போது, ஏதோ ஒரு விரக்தியில், காண்டீபத்தை சற்றுக் குறைவாகப் பேசிவிட்டான் தருமன். தான் மிகவும் மதிக்கும் அண்ணனைக் கொல்ல அர்ச்சுனனால் எப்படி இயலும்? அதற்காக காண்டீபத்தைக் குறைத்துப் பேசியதைக் கேட்டுக் கொண்டு சும்மா இருக்க முடியுமா? எனவே, தனது சபதத்தின்படி, தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தான் அர்ச்சுனன். எவர் தடுத்தும் அவன் மனத்தை மாற்ற முடியவில்லை. வழக்கப்படி எல்லோரும் கண்ணனிடம் ஓடினார்கள். கண்ணனும் அர்ச்சுனனை எவ்வளவோ சமாதானப்படுத்திப் பார்த்தான். அவன் மனம் மாறுவதாக இல்லை.

“ஆமாம், காண்டீபத்தைக் குறை சொன்னால் கொலை அல்லது தற்கொலை என்று சபதம் எடுத்திருக்கிறாயே… அந்தக் காண்டீபத்தைப் பயன்படுத்தி நீ செய்த சாதனைகளையெல்லாம், விரிவாக சொல்லேன்” என்று கேட்டான் கண்ணன். “உனக்குத் தெரியாதா?” என்றான் அர்ச்சுனன். “அதெல்லாம் இருக்கட்டும். நீ செய்த சாதனைகளையும் பெற்ற வெற்றிகளையும் உன் வாயால் நீயே சொல்” என்றான் கண்ணன். அர்ச்சுனன், தனது வெற்றிகளைப் பற்றியும் தனது வில்லாற்றலைப் பற்றியும் விரிவாகச் சொல்லி முடித்தான்.

“சரி. எல்லாம் ஆயிற்று. எல்லோரும் கிளம்புங்கள்” என்றான் கண்ணன்.

“ஆனால், நான் தற்கொலை செய்து கொள்வது உறுதி” என்றான் அர்ச்சுனன்.

“ஒருவன் எப்படி இருமுறை தற்கொலை செய்து கொள்ளமுடியும்” என்று கேட்டான் கண்ணன்.

“என்ன பிதற்றுகிறாய் கண்ணா? நான் எப்போது தற்கொலை செய்து கொண்டேன்?” என்று எரிச்சலுடன் கேட்டான் அர்ச்சுனன். கண்ணன் சொன்னான். “அர்ச்சுனா! எப்போது ஒருவன் தனது பெருமைகளைத் தானே பேசிக் கொள்கிறானோ, அவன் தற்கொலை செய்து கொள்கிறான் என்று பொருள். தற்பெருமை பேசுவது என்பது தற்கொலை செய்து கொள்வது தான். எப்போது உனது பெருமையை நீயே பேசினாயோ, அப்போதே நீ தற்கொலை செய்து கொண்டாய்” என்றான் கண்ணன். இந்த அடிப்படையில் பார்த்தால், இன்று எத்தனைபேர் நம்மில் உயிர் வாழ்கிறோம்?

ஒரு பள்ளி மாணவி, கம்ப இராமா யணத்தின் பால காண்டத்தை முழுவதும் மனனம் செய்திருந்தாள். பெருமையுற்ற அப்பள்ளி. அனைத்து மாணவர்கள் முன்னிலையிலும் பாடல்களை அவள் ஒப்பிக்கவும், அவளை பாராட்டவும் ஒரு விழா ஏற்பாடு செய்திருந்தது. சில பாடல்களை அந்த மாணவி ஒப்பித்த பின்னர், சிறப்பு அழைப்பாளர் வாழ்த்திப் பேசுவதாகவும் மாணவிக்கு சால்வையும் பரிசும் அளித்துவிட்டு அவர் கிளம்பிய பின்னர் தொடர்ந்து மாணவி பாடல்களை ஒப்பிப்பதாகவும் நிகழ்ச்சியை அமைத்திருந்தார்கள். ஏற்பாட்டின்படி சில பாடல்களை மாணவி ஒப்பித்த பின்னர், அவளை வாழ்த்திப் பேச சிறப்பு அழைப்பாளரை அழைத்தார்கள்.

“இந்தப் பெண் ஒப்பித்தபோது எனது பள்ளிப் பருவ நிகழ்ச்சி என் நினைவுக்கு வந்தது” என்று ஆரம்பித்த சிறப்பு அழைப்பாளர், மாணவப் பருவத்திலேயே நிறைய பாடல்களை அவர் மனனம் செய்து வைத்திருந்ததாகவும், சிறந்த பேச்சாளராக இன்று அவர் நாட்டு மக்களால் போற்றப்படுவதற்கு காரணம் அதுதான் என்று சொல்லி, அவர் மனப்பாடம் செய்த சில பாடல்களையும் ஒப்பித்து, கடைசியாக அவர் போல் அந்த மாணவியும் வெற்றி பெறுவாள் என்று நம்புவதாக வாழ்த்தி விடை பெற்றார்!

“தன்னை வியந்தான், விரைந்து கெடும்”, என்கிறான் வள்ளுவன். ‘இந்த குறளுக்கு நான் எவ்வளவு அழகாகப் பொருள் சொல்லிப் பேசுவேன் தெரியுமா?” என்பவர்களை என்னென்பது……?

ஆனால் இப்படிப்பட்டவர்கள், தங்களது சுய ஆதாயத்துக்காக தகுதியில்லாதவரையும் போற்றிப் புகழத் தயங்க மாட்டார்கள். மனத்தில் மறை பொருள் கொண்டு தகுதியில்லாதவரைப் புகழ்ந்து பாராட்டுவதும் நம்மிடம் பெருகித்தான் விட்டது. பணம் இருப்பவரையும், பதவியில் இருப்பவரையும் சுயலாபத்துக்காகப் புகழ்வதும் இழிநிலைதான். கற்றவர்களும் இன்று இந்த நிலையில் இருப்பதுதான் வேடிக்கையானது, வேதனையானதும் கூட.

மனம் மகிழ்ந்து உளப்பூர்வமாக பிறரைப் பாராட்டுவது என்பது ஓர் உயர்ந்த நிலை. அது இருவரையுமே உயர்த்துகிறது. தற்புகழ்ச்சி பேசுவது என்பது கீழ்மை நிலை. பேசுபவரையே அது தாழ்த்துகிறது. தற்புகழ்ச்சியும் பொய் புகழ்ச்சியும் தவிர்க்கப்பட வேண்டியவை.

சின்னச் சின்ன செயலுக்குக்கூட அடுத்த வரைப் பாராட்டிப் பழக வேண்டும். வீட்டையோ அல்லது அலுவலகத்தையோ நன்றாக பெருக்கித் துடைக்கும் வேலையாளை; விரைந்து சமைத்து சாப்பிடத் தரும் தாயை அல்லது மனைவியை; சொன்ன நேரத்தில் தனது வேலையை செய்து முடிக்கும் நண்பனை; அவன் நேர்த்தியாக உடை உடுத்தும் பழக்கத்தை; தேர்வு நேரத்திலாவது சீக்கிரம் எழுந்து படிக்க அமர நினைக்கும் பிள்ளையை; குழந்தையின் அழகான கையெழுத்தை என்று எதையும் பாராட்டலாம்.

மனம் விட்டுப் பாராட்டும்போது, பாராட்டப்படுபவர்களின் திறமையை மூடியிருக்கும் தயக்கமும் கூச்சமும் தாழ்மை உணர்ச்சியும் விலகுகின்றன. திறமைகள் மேலும் வெளிப்படுகின்றன.

வளர வேண்டியவர்களுக்கு வெளிச்சமும் உரமும் இத்தகைய பாராட்டு மழைதான். இந்த மழை திறமைகளை வளர்க்கிறது. தகுதியான வர்களைப் பாராட்டுவது என்பது நமது சமூகக் கடமை. அதனால் பயன்பெறுவது நாமும்தான்.


Thanks and Source :- உயர் நீதிமன்ற வழக்கறிஞர் த. இராமலிங்கம்,

தமிழ் அறிஞர் அண்ணாவின் ஆங்கிலத்திறமை



ஏ,பி,சி,டி - இல்லாத நூறு ஆங்கில வார்த்தைகள்

அறிஞர் அண்ணா அமெரிக்க நாட்டின் யேல் பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்தார். அப்போது அங்குள்ள மாணவர்களிடம் உரையாடினார். உரையாடலின் இடையே ஒரு மாணவர் எழுந்து 'தாங்கள் ஆங்கிலத்திலும் வல்லவர் என்று தெரியும். ஆங்கில எழுத்துகளான ‘A,B,C,D’ ஆகிய நான்கு எழுத்துகளும் வராத நூறு வார்த்தைகளைக் கூற முடியுமா?' எனக் கேட்டார். உடனடியாக விடையளித்தார் அறிஞர் அண்ணா. வியப்பாக இருக்கிறதா? ஒன்று முதல் தொண்ணூற்று ஒன்பது வரையிலான எண்களை ஆங்கிலத்தில் சொன்னார் அவர். நூற்றை ஆங்கிலத்தில் சொன்னால் அதில் ’D’ என்னும் எழுத்து வந்து விடும் என எல்லோரும் எதிர்பார்த்திருந்த போது 'STOP' எனக் கூறி நிறைவு செய்தார்.
இதற்கும் மேல் அறிஞர் அண்ணாத்துரை அவர்கள் ஓர் தமிழ் தேசியவாதி , தமிழ் அறிஞர். ஆகவே தாய்மொழி தமிழைத் தவிர்த்து / சிதைத்து ஆங்கிலப் புலமையுள்ளவராக வர முடியும் என்பது ஒரு கனவு என்பதை புரிந்து கொள்வார்களா?


ஒரு முறை நேரு தமிழகம் வந்திருந்த போது பள்ளிக்கூடம் ஒன்றிற்குச் சென்று உரையாற்றினார். நேரு ஆங்கிலத்தில் உரையாற்ற, மொழிபெயர்ப்பாளர் அதைத் தமிழில் மொழிபெயர்த்தார். ஒரு கட்டத்தில் நேரு, ‘வேறு யாராவது மொழிபெயர்க்கிறீர்களா?’ எனக் கேட்டார். அப்போது அங்கிருந்த பள்ளி மாணவர்களில் ஒருவன் எழுந்து சென்று அவருடைய பேச்சை மொழிபெயர்த்தான். அம்மாணவன் தான் பின் நாளில் அறிஞர் அண்ணா!

ஒருமுறை அறிஞர் அண்ணாவிடம் 'பிகாசு'(Because) என்னும் ஆங்கிலச்சொல் மூன்றுமுறை வருமாறு ஓர் ஆங்கிலச் சொற்றொடர் கூறுமாறு கேட்டார்கள். உடனடியாக அண்ணா சொன்னார் - “No sentence ends with because because ‘Because’ is a conjunction”

அறிஞர் அண்ணாவைப் பார்க்க இங்கிலாந்தைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர் வந்திருந்தார். அச்செய்தியாளர் 'அறிஞர் அண்ணா ஆங்கிலத்திலும் உலகச் செய்திகளிலும் வல்லவர் இல்லை; பன்னாட்டு அவை(‘UNO’) பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது' என்னும் எண்ணம் கொண்டிருந்தார். அண்ணாவை எப்படியாவது கேள்வியில் மடக்கி விட வேண்டும் என எண்ணிப் "பன்னாட்டு அவையைப் பற்றித் தங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார். அவ்வினாவிற்கு அண்ணா அளித்த விடையில் அச்செய்தியாளர் கொண்டிருந்த இறுமாப்பு அடியோடு தகர்ந்தது. என்ன சொன்னார் அண்ணா என்கிறீர்களா?

"ஐ நோ யுனோ. ஐ நோ யு நோ யுனோ. பட் யு டோன்ட் நோ ஐ நோ யுனோ."

(“I know UNO. I know – you know UNO. But you don’t know I know UNO” )

இதற்கும் மேல் அறிஞர் அண்ணாத்துரை அவர்கள் ஓர் தமிழ் தேசியவாதி , தமிழ் அறிஞர். ஆகவே தாய்மொழி தமிழைத் தவிர்த்து / சிதைத்து ஆங்கிலப் புலமையுள்ளவராக வர முடியும் என்பது ஒரு கனவு என்பதை புரிந்து கொள்வார்களா?


Thanks and Source:தமிழ் -Face book

Saturday, April 10, 2010

நற் சிந்தனைகள்-ஸ்ரீ அன்னை


*நாம் முன்னேற்றப் பாதையில் செல்வதே நம்மவர்களையும் முன்னேறச் செய்ய சிறந்த வழி.

*உடைமையில் உரிமை கோருவது அல்ல, அன்பு, உன்னையே காணிக்கையாகத் தருவதுதான் அன்பு கொள்வதன் பொருளாகும்.

*தெய்வத்தின் விருப்பத்திற்கு எதிராக எந்த ஒரு மனித சக்தியும் நிற்க முடியாது! (எனவே, சோதனையான நேரங்களிலும் நேர்மையாக வாழ்வோம்).

*நாம் நமது எண்ணங்களின் மீது கவனம் வைக்க வேண்டும் கெட்ட எண்ணங்கள் மிகவும் ஆபத்தான திருடர்கள்.

*நாம் அறிந்துள்ளவைகளுக்கு அப்பால் ஒரு அறியும் சக்தி நம்முள் உள்ளது. நமது சிந்தனைகளை விட நாம் உயர்ந்தவர்கள்.( எனவே, இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து நேர்வழியில் வாழ்வோம்)

*அன்பு விஸ்வமயமானது. நித்தியமானது. அது, என்றும் தன்னை வெளிப்படுத்திகொண்டே இருக்கிறது. அது ஒரு தெய்வ சக்தியாகும். அதன் புறவெளிப்பாட்டின் அடையாளங்கள் எல்லாம் அதன் கருவிகளைச் சார்ந்தவை. அன்பு எங்கும் வியாபித்திருக்கிறது. அதன் இயக்கம் தாவரங்களிலும் காணப்படுகிறது. விலங்குகளிடத்திலும் அது செயல்படுகிறது. கற்களிலும் அதைக் காண முடியும்.

*வாழ்வின் வெற்றி என்பது ஒரு மனிதன் பின்பற்றும் சத்தியத்தைப் பொறுத்தது.

*முதல் விதியாக இலட்சியத்தில் உறுதியில்லாமல் இருக்கலாம். ஆனால், இலட்சிய உறுதி வேண்டுமெனில் முதல் தரமான மூன்று அம்சங்கள் தேவை. அஞ்சாமை, துணிவு, விடாமுயற்சி எனும் இந்த மூன்றும் இருந்தால் முதல் விதி நம்மிடம் இருந்து இலட்சியத்தை வெற்றிபெறச் செய்யும்.

*நேர்மையும் நல்லெண்ணமும் இருக்கின்றபோதெல்லாம் இறைவனின் உதவியும் உள்ளது.

நற் சிந்தனைகள்-ஓஷோ ரஜனீஷ்

அன்பை அனுப்புங்கள்

அன்பு காட்ட எப்படிப்பட்ட வாய்ப்பு கிடைத்தாலும் அதை நழுவ விடாதீர்கள். அதைப் பயன்படுத்துங்கள். மாமிசம் சாப்பிடாத பழக்கம் உங்கள் அன்பிலிருந்து மலர்ந்திருந்தால் அது ஓர் அற்புதமான விஷயம். அகிம்சை, அன்பின் காரணமாக மலர்ந்தபோது பரம தர்மமாகிறது. மத நூல்களைப் படித்து ஒரு சம்பிரதாயத்தை ஏற்று மலர்ந்ததென்றால், அது ஒரு தர்மமல்ல! ஒருவருடைய தோளில் நீங்கள் கைவைத்தால், உங்களது இதயத்தின் அன்பு முழுவதையும் உங்கள் கையின் மூலம் அவருக்கு அனுப்புங்கள். உங்களது முழு உயிரையும் முழு இதயத்தையும் அந்தக் கையில் இணையச் செய்து போகவிடுங்கள். அந்தக் கை மாயமாக வேலை செய்வதைக் கண்டு அதிசயிப்பீர்கள்.

ஒருவரது கண்களைச் சந்திக்கும்போது உங்கள் கண்களில் உங்கள் இதயம் முழுவதையும் கொட்டி விடுங்கள்.கண்கள் மந்திரம் மாயம் அடைந்து ஒருவருடைய இதயத்தை அசைத்து விடுவதைக் கண்டு அதிசயிப்பீர்கள்.உங்கள் அன்பு விழிப்படைவது மட்டுமல்ல, மற்றவரது அன்பு விழிப்படைவதற்கும் வழி வகுப்பதாகி விடலாம்.சரியான முறையில் அன்பு செலுத்தும் மனிதன் ஒருவன் பிறந்தால் இலட்சக்கணக்கான மனிதர்களின் உள்ளத்தில் அன்பு பெருக்கெடுக்கத் துவங்கிவிடும்!.

Friday, April 9, 2010

எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாக நடக்கும்

கீதாசாரம்

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,
அதுவும் நன்றாகவே நடக்கும்
உன்னுடையதை எதை நீ இழந்தாய்?
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைதிருந்தாய், அது வீணாவதற்கு ?
எதை நீ எடுத்து கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்

"எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாக நடக்கும்" இது கீதாசாரத்தில் இருந்து ஒரு பகுதி, எது உண்மையோ பொய்யோ இந்த வரி மட்டும் நுற்றுக்கு நுறு வீதம் உண்மை. நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது நாம் அதை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும் இந்த உண்மையை நாம் அனேகர் உணர்ந்து கொள்ள முடிவது இல்லை. என்னுடைய வாழ்வில் நான் பார்த்தது உணர்ந்தது இதுதான், தலையை பிடுங்கி தலை கீழாக நின்றாலும் வருகிற முடிவை மாற்ற முடியாது, நம்மை வருத்தி என்னத்தை கண்டோம் இன்றையை பற்றி கவலைப்படுவோம், ஏன் என்றால் அதுவும் நன்றாகவே நடக்கும், ஏன் என்றால் நடந்ததும் நன்றாக நடந்தது.


Source and Thanks:

வாழ்கையின் வெற்றிக் கோட்பாடுகள்

* எந்த விசயமாக இருந்தாலும் அல்லது எந்த பிரச்னையாக இருந்தாலும் அதை அழகா கையாளுங்கள்.

* அர்த்தமில்லாமலும்,தேவையில்லாமலும் பின் விளைவுகளை அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்

* தானே பெரியவன்,தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.

* விட்டுக் கொடுங்கள்.

* சில நேரங்களில்,சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்.

* நீங்கள் சொன்னதே சரி,செய்வதே சரி என்று கடைசி வரை வாதாடதிர்கள்.

* குறுகிய மனப்பான்மையை விட்டோளியுங்கள்.

* உண்மை எது,பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கும்,அங்கே கேட்டதை இங்கும் சொல்வதை விடுங்கள்.

* மற்றவர்களை விட உங்களையே எப்போதும் தாழ்த்தி நினைத்து கவலைப்படதிர்கள்.

* அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படதிர்கள்.

* எல்லோரிடத்திலும் எல்லா விசயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டா இல்லையோ,சொல்லி கொண்டிருக்காதிர்கள்.

* கேள்விபடுகிற எல்லா விசயங்களையும் அப்படியே நம்பி விடாதிர்கள்.

* உங்கள் கருத்துகளில் உடும்புபிடியை இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்.

* மற்றவர்களுக்கு உரிய மரியாதையை கட்டவும்,இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் மறக்கதிர்கள்.

* புன்முறுவல் காட்டவும்,சிற்சில அன்பு சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாமல் நடந்து கொள்ளாதிர்கள்.

* பேச்சிலும்,நடத்தையிலும்,திமிர்த்தனத்தயும் தேவையில்லாத மிடுக்கையும் தவிர்த்து அடக்கத்தையும் பண்பாட்டையும் காட்டுங்கள்.

* அவ்வபோது நண்பர்கள் உறவினார்கள் நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.

* பிணக்கு ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன்வாருங்கள்.

*தேவையான இடங்களில் நன்றியும்,பாராட்தையும் சொல்ல மறவதிர்கள்.


Author:Unknown

நம்பிக்கை...

என்னுடைய வாழ்க்கையில் நான் அதிகம் தேடியது, தேடுவதும் நம்பிக்கையைத்தான் ஆங்கிலத்தில் Hope என்று சொல்லுவார்கள். ஆனால் நம்பிக்கையை இரண்டாக பிரிக்கலாம் ஒன்று கொள்கைகள், கோட்பாடுகள் மதங்கள் கருத்துக்கள் என்பனவற்றில் வைக்கும் நம்பிக்கை, ஆனால் இவற்றை Hope க்குள் சேர்க்க முடியாது. ஆனால் மற்றைய நம்பிக்கை நம்மிடம் உள்ளது, நாம் எம் மீது வைக்கும் நம்பிக்கை.

எம்மால் முடியும் என்ற நம்பிக்கைதான் எம்மை ஓட்டுகிறது நம்பிக்கை உடையும் போது என்ன செய்வது, செய்கிறோம் என்று தெரிவது இல்லை. உன்னால் முடியும் என்ற சொல்லுக்கு இருக்கும் பலம் நிச்சயமாக ஒரு அணுகுண்டுக்கு இருப்பது இல்லை, நாம் அதை விளங்கிக்கொள்ள வேண்டும். நாம் ஒருவனுக்கு நம்பிக்கை வார்த்தையை சொல்லுங்கள், அவனுடைய நம்பிக்கை தானக வளர ஆரம்பித்து விடும், ஆனால் நாம் என்ன செய்கின்றோம் நாம் அவனிடம் எவற்றையும் கொடுக்காமல் எல்லாவற்றையும் எதிர்பார்க்கின்றோம். ஒருவனுடைய நம்பிக்கை முறிவடைய பார்த்துக்கொண்டு இருக்க வேண்டாம். ஒருவனுக்குள் இருக்கும் ஆசையை நிறைவேற்ற, அல்லது நினைத்ததை சாதிக்க, வாழ்க்கையில் வெற்றி பெற என எல்லாவற்றுக்கும் நம்பிக்கை என்பது முக்கியமானது. ஒன்றை மறந்து விடாதீர்கள் நீங்கள் சொல்லும் சொற்கள் கூட ஒருவனுடைய நம்பிக்கையை உடைக்கும் அல்லது உயர்த்தும்.

ஆனால் மாறாக நாம் அதிகம் நம்புபவை மதங்கள், கோட்பாடுகள் கொள்கைள் என்று சொல்லலாம். இவற்றின் மீது அதிகம் நம்புகிறவர்களை நாம் தீவிரவாதிகள் எனலாம். இன்று உலகில் பயங்கரவாதிக்கும் தீவிரவாதிக்கும் உள்ள வித்தியாசம் காண்பதில் பெரிய பிரச்சனை உள்ளது. ஒரு கொள்ளை அல்லது ஒரு நம்பிக்கை மீது அளவுக்கு அதிகமாக நம்புவது தீவிரவாதம் என்று பொருள் அந்த தீவிரவதத்தை நாம் மற்றவர்களிடம் புகுத்த நினைப்பது தவறு, அதைச்சாதிப்பதற்கு நாம் கையில் எடுப்பது தான் பயங்கரவாதம், அதைத்தான் இன்றைய திவிரவாதம் செய்கின்றது. தீவிரவாதம் தவறு இல்லை, அளவுக்க அதிகமாக போகக்கூடாது, என்றைக்கு நாம் மற்றவர்களுடைய கொள்கை கோட்பாடுகளை மதிக்கிறோமோ அன்றுதான் பயங்கரவாதத்திற்கு வேலை இல்லாமல் போகும். ஒன்று என்னவேன்றால் நாம் எல்லோருமே எதாவது ஒன்றை நம்புகிறோம் பெற்றோர் தொடக்கம் மதம் தலைவர் கட்சி என சின்ன விடயங்களைக் கூட நாம் நம்புகிறோம். நம்புவதில் தவறு ஏதும் இல்லை, ஆனால் மற்றவர்களுடைய நம்பிக்கையை மதியுங்கள், முட்டாள்தனமான நம்பிக்கையாக இருந்தால் கூட மதியுங்கள், நீங்கள் அவற்றை நம்ப வேண்டியது இல்லை. அப்படி செய்யும் போதுதான் இன்றைய உலகின் பாதி பிரச்சனைகள் தீர்ந்து விடும். மற்றவனுடைய நம்பிக்கையை நாம் ஏற்றுக்கொண்டு மதிக்க மறுக்கும் இடத்தில் தான் பிரச்சனை ஆரம்பமாகிறது. இன்றைய உலகின் பாதிப்பிரச்சனைக்கு எம்முடைய நம்பிக்கைகள் தான் காரணம். உங்களுடைய நம்பிக்கைகள் உங்களிடமே இருக்கட்டும் மற்றவர்களுக்கு புகுத்த நினைக்கவேண்டாம், சற்று சிந்தியுங்கள்! மற்றவர்கள் சொல்லுகிறார்களே என்பதற்காக சண்டைக்கு போகவேண்டாம். பலமுறை சிந்தியுங்கள்.

ஆங்கிலத்தில் Hope க்கும், Believe க்கும் நிறைய வித்தியசம் உண்டு ஆனால் தமிழில் இரண்டு சொற்களும் குழப்பத்தை தரும். உங்கள் மீது, அல்லது ஒருவன் மீது நம்பிக்கை வைப்பதற்கும், ஒன்றில் மீது நம்பிக்கை வைப்பதற்கும் நிறை வித்தியாசம் உள்ளது, ஆனால் நம்பிக்கை என்ற சொல்லை இரண்டு இடத்திலும் பாவிக்கிறோம், சற்று குழப்பமானது தான். ஏதுவானாலும் உங்கள் மீது நம்பிக்கையை வையுங்கள் மற்றவனுக்கு நம்பிக்கையை ஊட்டுங்கள் ஆனால் மற்றய நம்பிக்கைகளில் மூழ்கிவிடாதீர்கள் என்பது தான் என்னுடைய எண்ணம்.

Source and Thanks: